ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிரக்கர் மோதல்; 3 பேர் காயம்
ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிரக்கர் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
ஆறுமுகநேரி:
முத்தையாபுரம் முத்தம்மாள் புரத்தை சேர்ந்த தங்கவேல் நாடார் மகன் பொன்ராஜ் (வயது 50). இவரது மகன் முகிலன் (17), மகள் தனலட்சுமி(16). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடிந்து, நேற்று காலையில் முத்தையாபுரத்துக்கு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். ஆறுமுகநேரி அருகிலுள்ள சாகுபுரம் வளைவில் சென்ற போது எதிரே தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த டிரக்கர் வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ேசர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரக்கர் ஓட்டி வந்த வீரபாண்டியன்பட்டணத்தை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் என்பவரை கைது செய்தனர்.