பங்களாப்புதூர் அருேக தனியார் பள்ளி வேன்-லாரி மோதல்20 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்
பங்களாப்புதூர் அருகே தனியார் பள்ளி வேன் மற்றும் லாரி மோதிக்கொண்ட விபத்தில் 20 மாணவ- மாணவிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
டி.என்.பாளையம்
பங்களாப்புதூர் அருகே தனியார் பள்ளி வேன் மற்றும் லாரி மோதிக்கொண்ட விபத்தில் 20 மாணவ- மாணவிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
பள்ளி வேன்
கோபியில் உள்ள தனியார் பள்ளி வேன் ஒன்று நேற்று காலை டி.என்.பாளையத்தில் இருந்து ஒவ்வொரு கிராமமாக சென்று மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு கள்ளிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. வேனை கோபி குமரன் வீதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 34) என்பவர் ஓட்டினார்.
இந்த வேனில் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 20 மாணவ- மாணவிகள் இருந்தனர்.
மோதல்
டி.என்.பாளையத்தை அடுத்த புஞ்சைதுறையம்பாளையம் ஈஸ்வரன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த லாரியும், பள்ளி வேனும் எதிா்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பள்ளிக்கூட வேனின் முன்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
விசாரணை
இந்த விபத்தில் வேனில் இருந்த மாணவ- மாணவிகள் காயமின்றி உயிர் தப்பியதுடன், டிரைவர்களும் காயமின்றி உயிர் தப்பினர். எனினும் மாணவ- மாணவிகளை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக டி.என்.பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு தனியார் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு வந்து தங்களுடைய குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.