பவானிசாகர் அருகேவாழை தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
பவானிசாகர் அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
உணவு-தண்ணீர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட 10 வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது வனப்பகுதி கோடை வெயில் காரணமாக கடும் வறட்சியாக காணப்படுகிறது. இதனால் யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி வருகின்றன.
அவ்வாறு வரும் யானைகள் வனப்பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து நின்றுகொள்கின்றன. இதனால் வனச்சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தும் வருகின்றன.
அட்டகாசம்
இந்த நிலையில் நேற்று அதிகாலை விளாமுண்டி வனப்பகுதியை விட்டு 2 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அந்த 2 யானைகள் வனப்பகுதிக்கு அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்துக்குள் சென்றன. தொடர்ந்து அங்கு துரைசாமி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் வாழைகளை காலால் மிதித்தும், வாழைகுருத்துகளை துதிக்கையால் முறித்து தின்றும் அட்டகாசத்தில் ஈடுபட்டன. சிறிது நேரத்துக்கு பின்னர் யானைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
உரிய இழப்பீடு
காலையில் துரைசாமி தோட்டத்துக்கு வந்து பார்த்தார். அப்போது யானைகளால் 100-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசப்படுத்தப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சேதம் அடைந்த வாழைகளை பார்வையிட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, 'வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறி கிராமங்களுக்குள் புகாதவாறு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். மேலும் வனப்பகுதியை சுற்றி அகழி அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்' என்றனர்.