பவானி அருகே கார்-லாரி மோதல்; பெண் பலி


பவானி அருகே கார்-லாரி மோதல்; பெண் பலி
x

பவானி அருகே காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியானார். கணவர், 2 மகள்கள் படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு

பவானி

பவானி அருகே காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியானார். கணவர், 2 மகள்கள் படுகாயம் அடைந்தனர்.

தடுப்புச்சுவரை தாண்டியது

சென்னை மாடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர் (வயது 43). அவருடைய மனைவி ஜூலியட் (42). இவர்களுடைய மகள்கள் ஜென்சி (15), கேத்தரின் (12). இவர்கள் 4 பேரும் சென்னையில் இருந்து கோவையில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை விக்டர் ஓட்டினார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நசியனூர் என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த தடுப்புச்சுவரை தாண்டி கோவை-சேலம் செல்லும் சாலையை நோக்கி பாய்ந்தது.

விபத்தில் பெண் பலி

அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த டேங்கர் லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே ஜூலியட் ரத்த வெள்ளத்தில் பலியானார். மேலும் காரை ஓட்டி வந்த விக்டர் மற்றும் ஜென்சி, கேத்தரின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சோகம்

இதற்கிடையே இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜூலியட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story