பவானி அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ரேஷன் அரிசி
ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் பவானி அருகே சிங்கம்பேட்டை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காரை ஓட்டிவந்தரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பழனிபுரம் பகுதியை சேர்ந்த தனபால் (வயது 49) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில், பூதப்பாடியில் உள்ள கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 1,640 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.