போடி அருகேபச்சிளங்குழந்தை திடீர் சாவு:போலீசார் விசாரணை
போடி அருகே பச்சிளங்குழந்தை திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ருக்மணி (வயது 22). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ருக்குமணி 3-வது முறையாக கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவருக்கு வீட்டில் பெண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் இரவில் அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு இருப்பதாக கூறி உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ருக்மணி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்ட்டார்.
இந்நிலையில் நேற்று காலை ருக்மணியின் தாய் ராமுத்தாய், பிறந்த பச்சிளங்குழந்தை இறந்ததாக கூறி போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதற்கிடையே சந்தேகம் அடைந்த நர்சு தெய்வராணி போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின், பாட்டி தாய் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். குழந்தை கொலை செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.