சென்னிமலை அருகே நடுரோட்டில் பஞ்சராகி நின்ற அரசு டவுன் பஸ் பயணிகள் அவதி
பயணிகள் அவதி
சென்னிமலையில் இருந்து தினமும் ஈரோட்டுக்கு பெருந்துறை ஆர்.எஸ்., புங்கம்பாடி, சென்னிமலைபாளையம், மேட்டுக்கடை உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக வழியாக 11டி என்ற ஒரே ஒரு அரசு டவுன் பஸ் மட்டும் சென்று வருகிறது. இந்த பஸ் தினமும் காலை, பகல், மாலை என 3 நேரங்களிலும் ஈரோட்டுக்கு சென்று வருகிறது. நேற்று வழக்கம் போல் சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ் காலை 10.15 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர்.
பெருந்துறை ஆர்.எஸ். அருகே சென்றபோது திடீரென பஸ்சின் முன்புற டயர் பஞ்சராகியது. இதனால் பஸ் நடுரோட்டில் நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர். உடனே பயணிகள் அனைவரும் இறங்கி பெருந்துறையில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ் வழியாக ஈரோட்டுக்கு சென்ற பஸ்சில் ஏறினார்கள். ஆனால் சென்னிமலைபாளையம், புங்கம்பாடி, மேட்டுக்கடை ஆகிய ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் பஸ் இல்லாமல் அவதிப்பட்டனர்.
மேலும் பஞ்சரான டயருக்கு பதிலாக மாற்று டயர் கொண்டு வந்து பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த பஸ் புறப்பட்டு சென்றது. நிரந்தரமாக செல்லும் பஸ் பழுது நீக்க சென்ற நிலையில் மாற்று பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ்சின் டயரும் பஞ்சர் ஆனது குறிப்பிடத்தக்கது.