சென்னிமலை அருகே நகை, பணத்துக்காக வயதான தம்பதி படுகொலை
சென்னிமலை அருகே நகை, பணத்துக்காக வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்டனா்.
சென்னிமலை
சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வயதான தம்பதி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட ஒட்டன்குட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 85). இவருடைய மனைவி சாமியாத்தாள் (74). இவர்களுக்கு வசந்தி (55), கலையரசி (50), கவிதா (45) என்ற 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.
இதில் 2-வது மகள் கலையரசி பெருந்துறை அருகே தோப்புப்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி கரியங்காட்டு தோட்டத்தில் வசிக்கும் தனது தாய், தந்தையை பார்த்து விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலையும் வழக்கம்போல் கலையரசி தனது தாய், தந்தையை பார்த்து விட்டு சென்றுள்ளார்.
படுகொலை
இந்தநிலையில் நாளை (திங்கட்கிழமை) காலை நடைபெறும் உப்பிலிபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு தீர்த்தம் எடுத்து செல்வதற்கு தனது பேரன் (கலையரசியின் மகன்) அஜீத் (26) என்பவரை ஏற்கனவே முத்துசாமி அழைத்துள்ளதாக தெரிகிறது.
அதன்பேரில் நேற்று காலை 7 மணி அளவில் கரியாங்காட்டு தோட்டத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு அஜீத் சென்றார். அப்போது வீட்டின் வெளிப்புற கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது முத்துசாமியும், சாமியாத்தாளும் முகங்கள் சிதைக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுமட்டுமின்றி வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தன. பின்னர் இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸ் அதிகாரிகள் விசாரணை
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், ஈரோடு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், பெருந்துறை துணை சூப்பிரண்டு ஜெயபாலன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த முத்துசாமி, சாமியாத்தாள் ஆகியோரின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இரும்பு கம்பி போன்ற ஆயுதத்தால் முத்துசாமியையும், சாமியாத்தாளையும் கொள்ளையர்கள் அடித்து கொன்று இருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தடயங்கள் பதிவு
இந்தநிலையில் கைரேகை நிபுணர்கள் கொலை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டுக்கு பின்புறம் உள்ள வாழை தோட்டத்துக்குள் ஓடிச்சென்றது. பின்னர் வீட்டுக்கு அருகே உள்ள ரோட்டில் சுமார் 300 மீட்டர் தூரம் வரை ஓடி அங்குள்ள புதரில் நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.
அதன்பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆ்ஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நகை, பணம் கொள்ளை
முத்துசாமியின் வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் கரும்பு விற்று வைத்திருந்த பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
எனவே மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டுக்குள் நுழைந்து ஆயுதங்களால் கொடூரமாக கணவன், மனைவியை தாக்கி கொன்றுள்ளனர். பின்னர் பீரோவையும் உடைத்து அதில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
கேமராக்கள் ஆய்வு
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலை ஓரங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலையும் வலைவீசி தேடி வருகின்றனர். வயதான கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமானோர் கொலை நடந்த வீட்டுக்கு முன்பு திரண்டுவிட்டனர்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.