சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி


சிதம்பரம் அருகே  மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

கடலூர்

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி வடகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன் மகன் அசோக்குமார் (வயது 31) கூலி தொழிலாளி. இவர் தனது உறவினர் குகன் (18) என்பவருடன் ஒரு காரில் சிதம்பரத்தில் இருந்து புவனகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை அசோக்குமார் ஓட்டினார்.

சிதம்பரம் அடுத்த சிலுவைபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே புவனகிரியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மீது இவர்களது கார் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் கார், அசோக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி நின்றது.

2 பேர் பலி

இந்த விபத்தில் அசோக்குமார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த வடகறிராஜபுரம் குளத்து மேட்டு தெருவை சேர்ந்த தொழிலாளியான புருஷோத்தமன் (43) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் குகன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த புருஷோத்தமனின் தங்கை புனிதா(38) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான புருஷோத்தமன், அசோக்குமார் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story