சின்னமனூர் அருகே, கணவர் ஓட்டி சென்றஆட்டோ கவிழ்ந்து பெண் பலி:7 பேர் படுகாயம்
சின்னமனூர் அருகே கணவர் ஓட்டி சென்ற ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். மேலும் 7 போ் படுகாயம் அடைந்தனர்.
ஆட்டோ கவிழ்ந்தது
சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர் நரசிங்க பெருமாள். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஷோபனா (வயது 30). தோட்ட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கதிர் நரசிங்க பெருமாள், தனது மனைவி உள்பட 13 பேரை தோட்ட வேலைக்காக தனது ஆட்டோவில் எரக்கோட்டைப்பட்டிக்கு ஏற்றி சென்றார்.
வேப்பம்பட்டி-ஓடைப்பட்டி சாலையில் எரக்கோட்டைப்பட்டி அருகே ஆட்டோ சென்றது. அப்போது சாலையின் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடியது. இதனால் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினர். ஒரு கட்டத்தில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.
பெண் பலி
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஷோபனா, பசுபதி (55), ஜோதி (50), பார்வதி (40), பெத்தக்கால் (36), ஜீவா (55), ஈஸ்வரி (55), சுதா (38) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஷோபனா பரிதாபமாக இறந்தார்.
மற்ற அனைவருக்கும் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்ட வேலைக்கு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.