சின்னசேலம் அருகே மினிலாரி மோதி பட்டதாரி வாலிபர் பலி
சின்னசேலம் அருகே மினிலாரி மோதி பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.
சின்னசேலம்,
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே அரசங்குடி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் குரு (வயது 20). பி.பி.எம். படித்து முடித்துள்ள இவர் தற்போது விவசாய வேலையை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் குரு தனது மோட்டார் சைக்கிளில் அரசங்குடியில் இருந்து சின்னசேலம் அடுத்த வீ.கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சிதம்பரம்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வி.கிருஷ்ணாபுரம் கிராம எல்லை அருகே முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த மினிலாரி ஒன்று, குரு சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாாின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.