சின்னசேலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி
சின்னசேலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்றாா்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே கல்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பெண்ணுடன், கல்லாநத்தம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 24) என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண், மணிகண்டனிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று, மணிகண்டன், அந்த பெண்ணிடம் சென்று பேசி பழக வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் அண்ணன், இதுகுறித்து மணிகண்டனிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன் மற்றும் அவரது உறவினரான கல்லாநத்தத்தை சேர்ந்த நல்லதம்பி மகன் கண்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கண்ணன் உள்பட 2 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.