குன்னூர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை


குன்னூர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 2:32 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்: குன்னூர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

வனவிலங்குகள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வனப்பகுதியையொட்டிய கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமை, கரடி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து சுற்றித்திரிந்து வருகின்றன. குறிப்பாக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் இரைதேடி சாலையோரம் நடமாடுவதும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் இரவு நேரத்தில் புகுந்த சிறுத்தை, நாய் ஒன்றை கவ்வி செல்ல முயன்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறுத்தையிடம் இருந்து நாய் தப்பி சென்றுவிட்டது. இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை

இந்தநிலையில் குன்னூர் அருகே உள்ள பாரஸ்ட் டேல் பகுதி சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. பின்னர் சிறிதுநேரத்தில் அந்த சிறுத்தை அங்குள்ள பாறையின் பின்புறம் சென்றுவிட்டது.

இதனை சாலையில் வாகனத்தில் வந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் தொடர் சிறுத்தைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

இதனால் அவர்கள், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

'வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் வெளியேறி குடியிருப்பு பகுதி, சாலையில் சுற்றித்திரிவது தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதற்கு காரணம் வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களை அழித்து கட்டிடங்கள் கட்டுவதும், குடியிருப்பு பகுதியாக மாற்றுவதும் தான். எனவே, சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்காணித்து அவைகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story