கூடலூர் அருகேசாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
கூடலூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பாச்சி பன்னை அருகே ஓட்டல்கள், பழக்கடை, குளிர் பானங்கள் மற்றும் அலங்கார பொருள் விற்பனை நிலையங்கள், திராட்சை தோட்டங்கள் உள்ளன. இதனால் கேரளா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து சாலையோரத்தில் நிறுத்தி தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க முயலும்போது விபத்து ஏற்படுகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் உள்ள கழிவுகளை நெடுஞ்சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பை மலைப்போல் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் குப்பை கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் அதிலிருந்து வரும் புகையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளை தினந்தோறும் அகற்ற வேண்டும் அல்லது குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.