தேவதானப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தேவதானப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி சாவாலி பாட்டன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்பாலன் மகன் தயாநிதி (வயது 15). அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 27-ந் தேதி பள்ளியில் அவரது வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது தயாநிதி பாடத்தை கவனிக்காமல் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த ஆசிரியர் தயாநிதியிடம் பெற்றோரை அழைத்து வருமாறு கூறினார். இதையடுத்து பள்ளிக்கு வந்த செந்தில்பாலன் வகுப்பறைக்கு சென்று தயாநிதியை கண்டித்து வீட்டிற்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் தயாநிதி அந்த பகுதியில் புதிதாக கட்டி வரும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த அவர்கள் தனது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.