தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர் பாஸ்கர் (21). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் 2 பேரும் ஜெயமங்கலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் குள்ளப்புரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராம்குமார் ஓட்டினார்.
ஜெமங்கலம்-குள்ளப்புரம் சாலையில் சிந்துவம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது எதிரே, சில்வார்பட்டியை சேர்ந்த ரகுபதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ராம்குமார், பாஸ்கர் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராம்குமார் பரிதாபமாக இறந்தார். பாஸ்கரனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ரகுபதி (24) மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.