ஏரல் அருகே வாழவல்லான் நீரேற்று நிலையத்தில் கடும் வறட்சி:கனிமொழி எம்.பி. ஆய்வு


தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே வாழவல்லான் நீரேற்று நிலையத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் புதன்கிழமை கனிமொழி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே கடும் வறட்சி நிலவும் வாழவல்லான் நீரேற்று நிலையத்தில் நேற்று கனிமொழி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

நீரேற்று நிலையத்தில் வறட்சி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏரல் அருகே வாழவல்லான் நீரேற்று நிலையம் மூலம் தூத்துக்குடி துறைமுகம், ரெயில்வே மற்றும் ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இ்ந்தநிலையில், நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து மங்கலக்குறிச்சி தடுப்பணை வரை வந்தது. ஆனால் வாழவல்லன் தடுப்பணைக்கு தண்ணீர் வராததால், இங்குள்ள நீரேற்று நிலையத்திலிருந்து ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கனிமொழி எம்.பி. ஆய்வு

இதை அறிந்த கனிமொழி எம்.பி. நேற்று வாழவல்லான் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்துக்கு வந்தார். அப்பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு கலெக்டர் செந்தில்ராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகளுடன் குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், மஞ்சள்நீர்காயலில் குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு, அங்கிருந்து சுத்திரிக்கப்பட்ட தண்ணீர் வாழவல்லான் வடிகால் வாரிய அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு குழாய்கள் மூலம் கிராமங்களுக்கு ஒரு மாதத்துக்குள் மீண்டும் தங்கு தடை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீரை மஞ்சள்நீர்காயல் நீரேற்று நிலையத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குனர் சரவணன், தலைமை பொறியாளர் நடராஜன், மேற்பார்வை பொறியாளர் கோபால், உதவி நிர்வாக பொறியாளர் குமார், உதவி பொறியாளர் மகேஷ், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, வருவாய் ஆய்வாளர் முத்து சரவணன், உமரிக்காடு பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் தொடர்பு முகாம்

மேலும், ஆறுமுகநேரியை அடுத்துள்ள மூலக்கரை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். முன்னோடி முகாமில் பெறப்பட்டு இருந்த 103 மனுக்களில், 88பேரின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இம்முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வீடு தேடி மருத்துவம், ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் உட்பட 12 துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார். முன்னதாக திருச்செந்தூர் உதவிகலெக்டர் குரு சந்திரன் வரவேற்று பேசினார். திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் நன்றி கூறினார்.

மக்கள் களம் நிகழ்ச்சி

இதேபோன்று, கயத்தாறு அருகிலுள்ள பன்னீர்குளம் கிராமத்தில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் முன்னிலையில் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.பி. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், கடம்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வடக்கு மயிலோடை, திருமாலாபுரம், குருமலை ஆகிய பஞ்சாயத்துக்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்னப்பாண்டியன் செய்திருந்தார்.


Next Story