ஈரோடு அருகே குழந்தை பெற்ற சிறுமி சிகிச்சைக்கு சென்றபோது விபத்தில் சாவு; வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது


ஈரோடு அருகே  குழந்தை பெற்ற சிறுமி சிகிச்சைக்கு  சென்றபோது விபத்தில் சாவு;  வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
x

ஈரோடு அருகே குழந்தை பெற்ற சிறுமி சிகிச்சைக்கு ஆம்புலன்சில் சென்றபோது விபத்தில் இறந்தார். இவருடன் குடும்பம் நடத்திய வாலிபர்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

ஈரோடு

ஈரோடு அருகே குழந்தை பெற்ற சிறுமி சிகிச்சைக்கு ஆம்புலன்சில் சென்றபோது விபத்தில் இறந்தார். இவருடன் குடும்பம் நடத்திய வாலிபர்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

சிறுமி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை கோபாலகிருஷ்ணன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து சிறுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமி பிரசவத்திற்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24-ந்தேதி அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

தீவிர சிகிச்சை

பின்னர் சிறுமியின் உடல்நிலை மோசமானது. இதனால் ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அந்த சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

மேலும் உடல்நிலை மோசமானதால் சிறுமியை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உறவினர்கள் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 27-ந்தேதி அந்த சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு கொண்டு சென்றனர்.

சிறுமி சாவு

இந்த ஆம்புலன்ஸ் ஈரோடு அருகே மேட்டுக்கடை பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள ரவுண்டானா மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அந்த சிறுமியை மீட்டு வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு கொண்டு சென்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த 2-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார், ஆம்புலன்சை அஜாக்கிரதையாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்புக்கு காரணமானதாக தனியார் மருத்துவ மனையின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போக்சோ வழக்கு...

இதற்கிடையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த சிறுமிக்கு 17 வயதே ஆனது தெரிய வந்தது. இதையடுத்து கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

17 வயது சிறுமி இறப்பு, கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ வழக்கு பதிவு என்பதால் இருவீட்டாரின் உறவினர்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.


Next Story