செஞ்சி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
செஞ்சி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செஞ்சி,
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரையோரம் 141 வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி இந்த வீடுகளை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சதீஷ், சத்தியமங்கலம் வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் வேலு மற்றும் போலீசார் பொக்லைன் எந்திரத்துடன், சத்தியமங்கலம் கிராமத்திற்கு சென்றனர். இதற்கு கிராம மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தீக்குளிக்க போவதாகவும் சாலை மறியலில் ஈடுபடுவதாகவும் கூறி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத், செஞ்சி தாசில்தார் பழனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அங்கு முடிவு எதுவும் எட்டப்படாததால், அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிட்டு புறப்பட்டு சென்றனர். இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.