கடமலைக்குண்டு அருகேதற்கொலைக்கு முயன்ற விவசாயி:ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது
கடமலைக்குண்டு அருகே விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் ஊராட்சி மன்ற தலைவின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டு அருகே உள்ள மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் அன்பில்சுந்தரபாரதம் (48). கடந்த 3-ந்தேதி அன்பில்சுந்தரபாரதம், ராஜாவின் தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு இருந்த 25-க்கும் மேற்பட்ட முருங்கை மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார். அப்போது அதை தடுக்க முயன்ற ராஜாவை, அவர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜா, அன்றைய தினம் இரவு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் கொடுத்தார். அதன்பேரில் அன்பில்சுந்தரபாதத்தின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். கைதான அன்பில்சுந்தரபாதம் மயிலாடும்பாறை ஊராட்சி தலைவியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.