கடம்பூர் அருகே யானை தூக்கி வீசியதில் தொழிலாளி பரிதாப சாவு
கடம்பூர் அருகே யானை தூக்கி வீசியதில் தொழிலாளி பரிதாப இறந்தனா்.
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே யானை தூக்கி வீசியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
கடம்பூர் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 64). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சின்னத்தாயி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடம்பூரை அடுத்த இருட்டிபாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தொழிலாளியாக ராமன் வேலை செய்து வந்தார். இவருடன் மனைவி சின்னத்தாயும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்தில் இருந்து பாலை எடுத்துக்கொண்டு இருட்டிபாளையத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்துக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு பாலை வழங்கி விட்டு மீண்டும் தோட்டத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
தூக்கி வீசியது
இருட்டிபாளையம் வரும் வழியில் உள்ள ஒரு பள்ளம் அருகே வந்தபோது எதிரே காட்டு யானை ஒன்று திடீரென வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ராமன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அதற்குள் ராமனை அந்த காட்டு யானை தனது துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் அருகில் இருந்த பாறை மீது விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கடம்பூர் வனத்துறையினர் மற்றும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராமன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானை தூக்கி வீசியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.