கடம்பூர் அருகே பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து பாதிப்பு
கடம்பூர் அருகே பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாற்றுப்பாதை அமைக்க மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பாலம் கட்டும் பணி
சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதியில் மாக்கம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்துக்கு சத்தியமங்கலத்தில் இருந்து தினமும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாக்கம்பாளையம் கிராமத்துக்கு செல்லும் வழியில் குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரை பள்ளம் உள்ளன. அங்கு மழை காலங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வர முடியாமலும், கிராம மக்கள் அங்கிருந்து வெளியே வரமுடியாமலும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரை பள்ளத்தில் பாலம் கட்டும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதனால் அந்த வழியாக அரசு பஸ், கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களிலும், மினி வேனிலும் மக்கள் சென்று வருகின்றனர்.
மாற்றுப்பாதை
பாலம் கட்டப்படும் இடத்தில் மாற்றுப்பாதை அமைக்கப்படாமல் உள்ளதால், பஸ் செல்ல முடியாத நிலை உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள காட்டுப்பகுதியில் மக்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனவே பஸ் இயக்கப்படும் வகையில் பாலம் கட்டும் பணிகள் முடியும் வரை மாற்று பாதையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.