கடம்பூர் அருகேஆடு மேய்த்த பெண்ணைமிதித்து கொன்ற யானை
கடம்பூர் அருகே ஆடு மேய்த்த பெண்ணை யானை மிதித்து கொன்றது.
கடம்பூர் அருகே ஆடு மேய்த்த பெண்ணை, காட்டு யானை மிதித்து கொன்றது.
ஆடு மேய்க்க சென்றார்
கடம்பூர் அருகே உள்ள சின்னசாலட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி இளையம்மாள் (வயது 55). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.
சின்னசாலட்டி கிராமத்துக்கு அருகே உள்ள மாஸ்தி கொடிகால் என்ற இடத்தில் இளையம்மாள் நேற்று காலை ஆடு மேய்க்க சென்று உள்ளார். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் உள்ள பாறை ஒன்றின் மீது இளையம்மாள் உட்கார்ந்தபடி மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கவனித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது.
மிதித்து கொன்றது
யானை திடீரென வந்ததை கண்டதும், இளையம்மாள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து எழுந்து ஓடினார். இதனால் அவரை காட்டு யானை துரத்தியது. சிறிது தூரம் ஓடியதும், அவர் கால் தவறி கீழே விழுந்தார். எனினும் அவர் அதில் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து ஓட முயன்றார். ஆனால் பின்னால் வந்த காட்டு யானை இளையம்மாளை காலால் மிதித்து கொன்றது.
இதில் சம்பவ இடத்திலேயே இளையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளையம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.