கண்டாச்சிபுரம் அருகே கஞ்சா வைத்திருந்த மாணவர்கள் 2 பேர் கைது
கண்டாச்சிபுரம் அருகே கஞ்சா வைத்திருந்த மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கண்டாச்சிபுரம்
திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமத்தில் கண்டாச்சிபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் 18 வயதுடைய மாணவர் மற்றும் கண்டாச்சிபுரத்தில் உள்ள தொழிற்பயிற்சியில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் மாணவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.