காட்டுமன்னார்கோவில் அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் கைது உறவினர்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


காட்டுமன்னார்கோவில் அருகே  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் கைது  உறவினர்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கடலூர் மாவட்ட தலைவரை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதை கண்டித்து உறவினர்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்த்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் நேற்று நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் (தேசிய புலனாய்வு முகமை), அமலாக்கத்துறையினருடன் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வடக்கு கொளக்குடி ஜாகீர்உசேன் நகரை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கடலூர் மாவட்ட தலைவர் பயாஸ் அகமது (வயது 35) வீட்டில் சோதனை நடத்துவதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள், காட்டுமன்னார்கோவில் போலீசாருடன் வந்தனர். பின்னர் அவர்கள் பயாஸ் அகமதுவின் வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை நடத்தினர்.

கைது

இதையடுத்து பயாஸ் அகமதுவிடம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென கைது செய்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். மேலும் அவருடைய செல்போன் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே பயாஸ் அகமது கைதான சம்பவம் பற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் காலை 7.30 மணி அளவில் ஜாகீர்உசேன் நகர் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலை மறியல்

அப்போது அவர்கள், பயாஸ் அகமதுவை ஏன் கைது செய்தீர்கள்?, நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வந்து கைது செய்ததற்கான காரணம் என்ன?, அவரை தற்போது எங்கு வைத்துள்ளீர்கள்? என கேட்டனர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக விசாரித்து 10 மணிக்குள் தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் காலை 10.30 மணி வரை போலீசார் எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் மீண்டும் லால்பேட்டை கைக்காட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், மாலைக்குள் தகவல் அளிப்பதாக தெரிவித்தனர். அதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

22 பேர் கைது

பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் போலீசார் தகவல் தெரிவிக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் லால்பேட்டையில் உள்ள திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸ்காரர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்து காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பயாஸ் அகமதுவை கைது செய்ததை கண்டித்து அவரது உறவினர்கள் அடுத்தடுத்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story