கவுந்தப்பாடி அருகேசமையல் தொழிலாளி குத்திக்கொலை
கவுந்தப்பாடி அருகே சமையல் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டாா்.
கவுந்தப்பாடி அருகே சமையல் தொழிலாளி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
தகவல்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள பகுதி ஆண்டிபாளையம். இங்குள்ள கொப்பு வாய்க்கால் பாலத்தின் அருகே ரத்தக்காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் ஒருவர் மயங்கி கிடப்பதாக கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று ரத்தக்காயங்களுடன் கிடந்தவரை பார்த்தனா். அப்போது அவர் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததை கண்டனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
சமையல் தொழிலாளி
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் கோபி அருகே உள்ள எஸ்.கணபதிபாளையம் அண்ணா வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 46) என்பதும், சமையல் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும் (42), 2 மகன்கள் உள்ளதும் தெரியவந்தது.
ஆண்டிபாளையம் பகுதிக்கு கிருஷ்ணமூர்த்தி எதற்காக வந்தார்? அல்லது அவரை யாராவது கடத்தி வந்து குத்தி படுகொலை செய்தார்களா? அல்லது மது குடிப்பதற்காக வந்த இடத்தில் தகராறு ஏற்பட்டு குத்தி கொலை செய்யப்பட்டாரா? அவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த கொலைக்காரர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
மேலும் கொலை நடந்த இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் சிறிது தூரம் வரை ஓடிய நாய் நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி அருகே சமையல் தொழிலாளி, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.