கோபி அருகே மயான சுற்றுச்சுவரை இடித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கோபி அருகே மயான சுற்றுச்சுவரை இடித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோபி அருகே கரட்டடிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், லக்கம்பட்டி பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட கரட்டடிபாளையத்தில் மயானம் ஒதுக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மயானத்தின் சுற்றுச்சுவரை சிலர் இடித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மயானம் முன்பு நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் மயான சுற்றுச்சுவரை இடித்ததை கண்டித்து சத்தி-கோபி சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோபி போலீார் மற்றும் தாசில்தார் உத்திரசாமி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது மயான சுற்றுச்சுவரை இடித்தவர்கள், உடனே அதை கட்டித்தருகிறோம் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சத்தி-கோபி சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.