கோபி அருகேதனியார் பஸ்-ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதல்13 பேர் காயம்


கோபி அருகேதனியார் பஸ்-ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதல்13 பேர் காயம்
x

கோபி அருகே தனியார் பஸ்-ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனா்.

ஈரோடு

கோபி அருகே தனியார் பஸ்சும், ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர்.

நேருக்கு நேர் மோதல்

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூரு நோக்கி நேற்று தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 80 பேர் பயணம் செய்தனர். பஸ்சை மைசூருவை சேர்ந்த நாகேந்திரன் (வயது 35) என்பவர் ஓட்டினார்.

அதே நேரத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி நோக்கி ஒரு ஆம்புலன்ஸ் சென்று கொண்டு இருந்தது. அந்த ஆம்புலன்சில் பெண் நோயாளி ஒருவரும், அவருக்கு உதவியாக ஒரு பெண் ஆகியோர் இருந்தனர். ஆம்புலன்சை டிரைவர் சிவக்குமார் (27) என்பவர் ஓட்டி வந்தார்.

13 பேர் காயம்

கோபியை அடுத்த அரசூர் அருகே உள்ள ஒரு பாலத்தில் எதிர்பாராதவிதமாக தனியார் பஸ்சும், ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

மேலும் பஸ் பாலத்தின் தடுப்புச்சுவர், மின்கம்பம் மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் மின்கம்பம் சேதம் அடைந்தது. மேலே சென்ற மின்ஒயர்கள் அறுந்து தொங்கியது. விபத்தில் பஸ் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. பஸ்சில் இருந்த 10 பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.

மின்வினியோகம் பாதிப்பு

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மற்ற 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் ஆம்புலன்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் சிவக்குமார் (27), 2 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்கள் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் மின்கம்பத்தில் மோதியதால் அந்த பகுதியில் சுமார் 1½ மணிநேரத்துக்கு மேல் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின்வினியோகத்தை சரிசெய்தனர்.


Next Story