கோவில்பட்டி அருகேபட்டாசு ஆலையில் வெடி விபத்து


கோவில்பட்டி அருகேபட்டாசு ஆலையில் வெடி விபத்து
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:47 PM GMT)

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 அறைகள் தரைமட்டமானது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 அறைகள் தரைமட்டமானது.

பட்டாசு ஆலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ்நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் நாடார் (வயது 65). இவர் கோவில்பட்டி அருகே உள்ள முக்கூட்டுமலை கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

வெடி விபத்து

நள்ளிரவு 12 மணி அளவில் பட்டாசுகள் வைத்திருந்த அறையில் திடீரென்று பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் ஆலையில் 2 அறைகள் முழுவதும் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். மேலும் கழுகுமலை போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிர் சேதம் தவிர்ப்பு

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தொழிலாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பரபரப்பு

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story