மானாமதுரை அருகே விவசாயம் செழிக்க வேண்டி அம்மனுக்கு மண் சட்டியில் கறிச்சோறு படையல்
மானாமதுரை அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அம்மனுக்கு மண் சட்டியில் கறிச்சோறு படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மானாமதுரை
மானாமதுரை அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அம்மனுக்கு மண் சட்டியில் கறிச்சோறு படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மண் சட்டியில் கறிச்சோறு
மானாமதுரை அருகே உள்ள கிளாங்காட்டூர், ஏ.நெடுங்குளம் கிராமத்தில் அழகி மீனாள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் சார்பில் மண்சட்டியில் கறிச்சோறு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படையல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
அதன் பின்னர் 15 ஆண்டுகள் கழித்து இந்தாண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக விழாவையொட்டி கிராமமக்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.
அம்மனுக்கு படையல்
கிராம மக்கள் அம்மனுக்கு படையல் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு புதிய மண் சட்டிகளில் பணியாரம், கொழுக்கட்டை, கறிச்சோறு, நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுகறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை வைத்து பின்னர் தங்களது வீடுகளில் இருந்து பாரம்பரிய முறைப்படி தீப்பந்த விளக்கு ஏற்றியவாறு விளக்குகள் அணையாதபடி கிராம மக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
அங்கு தாங்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை அம்மனுக்கு படையல் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கிளாங்காட்டூர் மற்றும் ஏ.நெடுங்குளம் கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.