மஞ்சூர் அருகே கிணற்றில் இளம்பெண் பிணம்;கொலையா?-போலீசார் விசாரணை
மஞ்சூர் அருகே கிணற்றில் இளம்பெண் உடல் பிணமாக மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்சூர்: கிணற்றில் இளம்பெண் உடல் பிணமாக மீட்கப்பட்டது. கொலை செய்யப்ப ட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டதாரி பெண்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு பாதகண்டியை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதியின் மகள் விசித்திரா (வயது 23). பி.சி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை விசித்திராவை வீட்டில் காணவில்லை. இதனால் அவரை, குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே அதேபகுதியில் உள்ள கிணற்றில் விசித்திரா இறந்து பிணமாக மிதந்த நிலையில் காணப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் இதுகுறித்து குடும்பத்தினருக்கும், மஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
போலீசார் விசாரணை
இதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி, மஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கிணற்றில் இருந்து விசித்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கிணற்றில் விசித்திரா பிணமாக மிதப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா?, தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்து யாராவது உடலை கிணற்றில் வீசி உள்ளார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தான் சரியான காரணம் தெரியவரும். மேலும் இளம் பெண்ணின் உடல் மிதந்த கிணறு குடிநீராக கிராமத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தற்காலிகமாக அந்த தண்ணீரை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.