மஞ்சூர் அருகே அனுமதி இன்றி கட்டப்பட்டு வந்த கட்டிடத்திற்கு 'சீல்'
மஞ்சூர் அருகே அனுமதி இன்றி கட்டப்பட்டு வந்த கட்டிடத்திற்கு ‘சீல்' வைத்து கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊட்டி: மஞ்சூர் அருகே அனுமதி இன்றி கட்டப்பட்டு வந்த கட்டிடத்திற்கு 'சீல்' வைத்து கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கீழ்க்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டான மட்டக்கண்டி பகுதியில் தனியாரால் 3 தளம் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு பேரூராட்சி நிர்வாகத்தில் முறையான அனுமதி பெறவில்லை என்று புகார் எழுந்தது. இதன் பேரில் பேரூராட்சி செயலர் ரவிக்குமார் தலைமையிலான அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து கட்டிடப்பணிகளை நிறுத்த கோரி கடந்த 3 மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கினர்.
ஆனாலும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டும் பணிகள் நடந்து வருவதால் கட்டிடத்தை இடிக்க கடந்த ஜூலை மாதம் நோட்டீஸ் ஓட்டப்பட்டது.
சீல் வைத்து நடவடிக்கை
அந்த நோட்டீசில் 15 நாட்களுக்குள் கட்டிடத்தை இடிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனாலும் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் நேற்று கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் மற்றும் வருவாய் துறையினர் மட்டக்கண்டிக்கு சென்று அனுமதி இன்றி கட்டப்பட்டு வந்த கட்டிட பணிகளை நிறுத்தி நோட்டீஸ் ஒட்டி கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.