ஊஞ்சலூர் அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி தொழில் அதிபர் பலி
ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தொழில் அதிபர் பலியானார். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மகன் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தொழில் அதிபர் பலியானார். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மகன் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
தந்தை-மகன்
திருப்பூர் ஜவகர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். அவருடைய மகன் நந்த கிஷோர் (வயது 19). இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரமேஷ், அவருடைய அண்ணன் பாலமுருகன், அக்காள் லதா ஆகியோர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கருவேலம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று குளிக்க முடிவு செய்தனர்.
ஒருவர் பலி
இதைத்தொடர்ந்து ரமேஷ், நந்த கிஷோர் உள்பட குடும்பத்தினர் 14 பேர் காரில் புறப்பட்டு நேற்று மதியம் கருவேலம்பாளையம் வந்தனர். பின்னர் குழந்தைகள் தவிர அனைவரும் அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
இதில் ரமேசும், நந்த கிஷோரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்த அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே நீந்தி சென்று 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு ரமேஷ் பிணமாக மீட்கப்பட்டார்.
தேடும் பணி தீவிரம்
தொடர்ந்து நந்தகிஷோரை தேடினார்கள். ஆனால் வெகுநேரமாக தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, ஆற்றில் இறங்கி நந்தகிஷோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட அவரது கதி என்ன? என்று தெரியவில்லை. எனினும் தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடந்தது.
இதற்கிடையே இதுபற்றி அறிந்ததும் மலையம்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் ரமேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆற்றில் மூழ்கி பனியன் கம்பெனி அதிபர் இறந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.