ஊட்டி அருகேடிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி


ஊட்டி அருகேடிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே நிலத்தை உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி

ஊட்டி: ஊட்டி அருகே நிலத்தை உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

விவசாயி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த தூனேறி அருகில் உள்ள கோவில்மேடுகொதுமுடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி(வயது 45). விவசாயி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தங்கமணி, கொடுமுடி பகுதியில் குத்தகைக்கு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் நிலத்தை உழ தங்கமணி முடிவு செய்தார்.

அதன்படி நேற்றுமுன்தினம் தங்கமணி அழைத்ததன்பேரில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவருக்கு சொந்தமான டிரில்லர் வகையான டிராக்டரால் டிரைவர் சுப்பிரமணி(25) என்பவர் நிலத்தை உழும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதனை நிலத்தின் ஓரமாக நின்று தங்கமணி பார்வையிட்டு கொண்டிருந்தார்.

பலி

நிலத்தின் ஓரமாக டிராக்டர் உழுது கொண்டே வந்தபோது திடீரென நிலைதடுமாறி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து அருகில் நின்றிருந்த தங்கமணி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் படுகாயம் அடைந்த தங்கமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் சுப்பிரமணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ஊட்டி இன்ஸ்பெக்டர் மணிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story