ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி
ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
தொழிலாளி
கயத்தாறு நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த கருப்பணன் மகன் சண்முகராஜ் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மோட்டார் சைக்கிள் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். பசுவந்தனை விலக்கு அருகே சென்றபோது, கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சண்முகராஜ் பலத்த காயமடைந்தார். ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை மீட்க அக்கம் பக்கத்தினர் ஓடிசென்றனர். ஆனால் அதற்குள் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவரிடம் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த எப்போதும்வென்றான் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகராஜ் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து காரை ஓட்டிச் சென்ற தூத்துக்குடி அத்திமரப்பட்டியைச் சேர்ந்த ராஜகோபால் (26) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.