ஓட்டப்பிடாரம் அருகே, காற்றாலை வாகனங்கள் செல்வதை தடுக்க சாலையின் குறுக்கே வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்


ஓட்டப்பிடாரம் அருகே, காற்றாலை வாகனங்கள் செல்வதை தடுக்க சாலையின் குறுக்கே வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-13T00:15:47+05:30)

ஓட்டப்பிடாரம் அருகே, காற்றாலை வாகனங்கள் செல்வதை தடுக்க சாலையின் குறுக்கே வைக்கப்பட்ட தடுப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே காற்றாலை வாகனங்கள் செல்வதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையின் குறுக்கே வைக்கப்பட்ட தடுப்புகளை நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர்.

சாலையின் குறுக்கே தடுப்புகள்

ஓட்டப்பிடாரம் அருகே மேலலட்சுமிபுரம் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் அனுமதி பெறாமல் பெரிய கனரக எந்திரங்களை கொண்டு சென்று கட்டிடப் பணிகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி சாலை சேதமடைந்து வருவதால், அனுமதி பெறாத காற்றாலை நிறுவனங்களின் கனரக வாகனங்கள் செல்ல ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த சாலையில் அறிவிப்பு பலகைகளும், தடுப்புகளும் வைக்கப்பட்டது. இதனால் தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவனங்கள் சார்பில் தடுப்புகளை அகற்றக் கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவித்தனர்.

அகற்றம்

இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில், மேலலட்சுமிபுரம் விலக்கு அருகே சாலையின் குறுக்கே வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம் தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

அப்போது ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story