ஓட்டப்பிடாரம் அருகேகிணற்றில் விழுந்த வாலிபர் சாவு
ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் இறந்து போனார்.
ஓட்டப்பிடாரம்:
நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த வெங்கடாசலம் மகன் முத்துக்குமார் (வயது 27). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து பரகத்நிஷா என்பவரை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களாக அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தாராம். இதனால் இவரது பெற்றோர் கடந்த மாதம் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி அருள்நகரில் வீடு வாடகைக்கு பிடித்து அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் அவருக்கு மனநல சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான கார் பார்க்கிங் வளாகத்தில் உள்ள கிணற்றில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த கிணற்றில் நேற்று முன்தினம் காலையில் முத்துக்குமார் விழுந்து தத்தளித்து கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து முத்துக்குமாரை மீட்டு, அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர். அவரை குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் படுத்த சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் புளியம்பட்டி போலீசார், வீட்டுக்கு சென்று முத்துக்குமார் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார் தானாக கிணற்றில் விழுந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.