பந்தலூர் அருகே வீடுகளை உடைத்த காட்டு யானைகள்
பந்தலூர் அருகே வீடுகளை காட்டு யானைகள் உடைத்தது.
பந்தலூர்: பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் 9 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றன. மேலும் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 3 காட்டு யானைகள் பன்னிகொல்லி பகுதிக்குள் புகுந்தன. தொடர்ந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டன. பின்னர் ஞானபிரகாசம் என்பவரது தோட்டத்தில் இருந்த வாழைகளை தின்று சேதப்படுத்தியது. இதையடுத்து சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்தது. அப்பகுதியில் கிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய 2 பேரின் வீடுகளின் மேற்கூரைகளை உடைத்து சேதப்படுத்தின. இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு ஏலமன்னாவில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்தன. பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.