பண்ணாரி அருகே சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை
பண்ணாரி அருகே சாலையோரம் காட்டு யானை நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்றார்கள்.
பண்ணாரி அருகே சாலையோரம் காட்டு யானை நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்றார்கள்.
வனப்பகுதி சாலை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. தண்ணீர் மற்றும் தீவனத்தை தேடி அடர்ந்த காட்டுக்குள் இருந்து யாைனகள் அடிக்கடி வெளியேறி விடுகின்றன.
சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாகத்தான் திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை மறித்து காட்டு யானைகள் கரும்புகளை சுவைத்து பழகி விட்டன. அதனால் அடிக்கடி காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக வந்து நின்றுவிடுகின்றன.
சில நேரங்களில் நடுரோட்டிலேயே யானைகள் உலாவுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
அச்சத்துடன் சென்றனர்...
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பண்ணாரி சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக ஒரு காட்டு யானை வந்து நின்றது. அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் யானை நிற்பதை பார்த்து சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். ஆனால் 8.30 மணி வரை யானை செல்லாமல் அங்கேயே நின்றது. இதனால் வேறு வழியின்றி வாகன ஓட்டிகள் அச்சத்துடன் யானை நின்ற இடத்தை கடந்து சென்றார்கள். சிலர் இந்த காட்சிகளை செல்போனிலும் படம் பிடித்தார்கள்.
இதேபோல் தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை தாளவாடி-தலமலை ரோட்டுக்கு வந்தது. சுமார் 10 நிமிடங்கள் ரோட்டில் அங்கும் இங்கும் உலா வந்த யானை காட்டு்க்குள் சென்றது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.