பண்ணாரி அருகே செல்பி எடுத்த வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை
பண்ணாரி அருகே செல்பி எடுத்த வாகன ஓட்டிகளை ஒற்றை யானை துரத்தியது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது மழை பெய்து வருவதால் அப்பகுதி பசுமையாக உள்ளது. இதனால் யானைகள் சாலையோரம் முகாமிட்டு தீவனம் உண்ணுகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை பண்ணாரி அருகே திம்பம் செல்லும் சாலையில் வந்து நின்றது. இதனை பார்த்த அந்த வழியாக வாகனத்தில் வந்த 2 பேர் யானையை செல்பி எடுக்க முயன்றனர். அப்போது ஆவேசமடைந்த யானை வாகன ஓட்டிகளை துரத்தியது. இதனால் அவர்கள் அங்கிருந்து வேகமாக சென்று தப்பித்து விட்டனர்.
யானைகளை செல்பி எடுக்கக் கூடாது ஆபத்தானது, அப்படி எடுத்தால் வாகனம் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.