பண்ருட்டி அருகே ரூ.9 லட்சத்தில் கட்டிவரும் கரும காரிய கொட்டகை சுவர் இடிந்து விழுந்தது: தரமின்றி அமைப்பதாக கிராம மக்கள் புகார்


பண்ருட்டி அருகே ரூ.9 லட்சத்தில்  கட்டிவரும் கரும காரிய கொட்டகை சுவர் இடிந்து விழுந்தது: தரமின்றி அமைப்பதாக கிராம மக்கள் புகார்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:50 AM IST (Updated: 26 Aug 2023 2:08 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே ரூ.9 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கரும காரிய கொட்டகைக்கான அடித்தள சுவர் இடிந்து விழுந்தது. இக்கட்டிடம் தரமின்றி கட்டப்படுவதாக கூறி கட்டிட பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

கடலூர்

பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மேல் அருங்குணம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கருமகாரிய கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கருமகாரிய கட்டிடம் கட்ட ஒன்றியக்குழு பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சம் ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் பணி தொடங்கப்பட்டது. இதில் தரைத்தளம் வரை சுவர் எழுப்பப்பட்டு தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இக்கட்டிடத்தின் ஒரு புற அடித்தள சுவர் திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.

பணி தடுத்து நிறுத்தம்

இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அங்கு விரைந்து வந்து தரமின்றி பணி நடைபெறுவதாக கூறி பணியை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உரிய ஆய்வு செய்து கட்டிட பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதுவரை கட்டிட பணி நடைபெறக்கூடாது எனவும் தெரிவித்தனர். இதையடுத்து பணியாளர்கள் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story