பெரியகுளம் அருகேசோத்துப்பாறை அணையில் ஷட்டர் பழுது:கலெக்டர் ஆய்வு


பெரியகுளம் அருகேசோத்துப்பாறை அணையில் ஷட்டர் பழுது:கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் ஷட்டர் பழுதானதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி

பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு சோத்துப்பாறை அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணையில் சேகரிக்கப்படுகிறது. இந்த அணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன் பிடிப்பதற்கு ஏதுவாக தண்ணீர் திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அணையில் இருந்து குடிநீருக்காக வினியோகம் செய்யப்பட்ட தண்ணீர் கலங்கலாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.

குடிப்பதற்கு உகந்ததாக தண்ணீர் இல்லாததால் சோத்துப்பாறை அணையில் தேக்கி வைக்கப்பட்ட கழிவு நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த தண்ணீர் முழுவதுமாக நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டது.

பின்னர் பேரிஜம் ஏரியில் இருந்து அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் பேரிஜம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அணைக்கு வரத் தொடங்கியது. இந்த நீர்வரத்து காரணமாக 126.28 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 25 அடியை எட்டியுள்ளது. இதற்கிடையே சோத்துப்பாறை அணையில் ஷட்டர் பழுதானது. இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெரியகுளம் நகராட்சியில் விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Next Story