பெருந்துறை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி மூதாட்டி பலி

பெருந்துறை அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி பலியானாா்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சீனாபுரம் அருகே உள்ள வெங்கமேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் கடந்த 19-ந் தேதி காலை வெந்நீர் வைப்பதற்காக வீட்டுக்கு அருகில் தரையில் கிடந்த தென்னங்கீற்று ஓலைகளை எடுத்துள்ளார்.
அப்போது தென்னங்கீற்றுக்களுக்கு இடையே கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்கள் கலைந்தது. பின்னர் அந்த தேனீக்கள் சரஸ்வதியை கொட்டியது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து சரஸ்வதியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைத்தேனீக்கள் கொட்டி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






