பெருந்துறை அருகேகத்தியால் குத்தி பெண் படுகொலைநகைக்காக கணவர் வெறிச்செயல்
நகைக்காக கணவர் வெறிச்செயல்
பெருந்துறை அருகே நகைக்காக பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
கருத்து வேறுபாடு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 38). இவருடைய மனைவி ஜெயப்பிரியா (32). இவர்களுக்கு, விஷ்ணு (12), சித்தார்த் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டியில் இருந்து வந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சென்னிய வலசு என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர். வீட்டில் முறுக்கு தயாரித்து ஊர், ஊராக சென்று வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் ஜெயப்பிரியாவுக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயப்பிரியா தனது 2 மகன்களுடன் தாய் வீடான உசிலம்பட்டிக்கு சென்று தங்கியிருந்தார்.
கொலை
இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவனையும், மனைவியையும் உறவினர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜெயப்பிரியா மீண்டும் சென்னியவலசு சென்று கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அப்போது ஜெயப்பிரியா, தனது தாயின் நகையில் தனது பங்கையும் அவரது தங்கைக்கு கிடைக்க உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள ராமச்சந்திரன் மறுத்துள்ளார். இது சம்பந்தமாக கணவனுக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோல் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ராமச்சந்திரனுக்கும், ஜெயப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன், கத்தியால் ஜெயப்பிரியாவை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
கணவர் கைது
இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் ஜெயப்பிரியாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ராமச்சந்திரன் பெருந்துறை ெரயில் நிலைய ரோட்டில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி வழி நகை தனக்கு கிடைக்கவில்லையே என்கிற ஆத்திரத்தில், கணவனே மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெருந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.