கம்பம் அருகேமின்சாதன பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து
கம்பம் அருகே மின்சாதன பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு உரிமையாளர் மகேந்திரன் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் சிறிது நேரத்தில் கடையில் தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணை்க்க முயன்றனர். ஆனால் தீ மள, மளவென பற்றி எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து உத்தமபாளையம், கம்பம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.