கம்பம் அருகேஉத்தமுத்து கால்வாய் கரைகள் சேதம் :சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
கம்பம் அருகே சேதமடைந்த உத்தமுத்து கால்வாய் கரைகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
உத்தமபாளையம் பகுதி நன்செய் பாசன பரப்பிற்கு கம்பம் அருகே உள்ள தொட்டம்மன் துறையில் இருந்து அம்மாபட்டி வரை 17 கிலோ மீட்டர் நீளமுள்ள உத்தமுத்து கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் சுமார் 1,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் பல ஆண்டுகளாக உத்தமுத்து கால்வாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பல்வேறு இடங்களில் கரைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வரும் காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. தற்போது 2-ம் போக சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் போக சாகுபடிக்கு இடைப்பட்ட காலத்தில் வாய்க்காலை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் பாசன பரவு விவசாயிகள் கூறுகையில், உத்தமுத்து கால்வாய் பராமரிப்பு மேற்கொள்ளப்படாமல் உள்ளதால் கரைகள் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளன. மேலும் செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதனால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும் போது தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். எனவே வாய்க்காலை பராமரிக்க வேண்டும் என்றனர்.