பொள்ளாச்சி அருகே 1½ மாத பெண் குழந்தை மர்ம சாவு- போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே 1½ மாத பெண குழந்தை மர்மமான முறையில் இறந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே 1½ மாத பெண குழந்தை மர்மமான முறையில் இறந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் குழந்தை
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவருக்கு காயத்ரி என்கிற மனைவியும், பிறந்த 1½ மாதங்களே ஆன பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குறுஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் தென்னைநார் தொழிற்சாலையில் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை பெண் குழந்தை அசைவு இல்லாமல் கிடந்ததாக தெரிகிறது.
இதையடுத்து பெற்றோர் குழந்தையை தூக்கி கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சந்தேக மரணம்
முதற்கட்ட விசாரணையில் காயத்ரி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு, தனது அருகில் தூங்க வைத்து உள்ளார். அப்போது அருகில் தூங்கி கொண்டிருந்த காயத்ரி துக்கத்தில் குழந்தையின் மீது படுத்து தூங்கியதாகவும், அதனால் குழந்தை மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் குழந்தையின் தலையில் மண்டை ஓடு உடைந்து உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






