புஞ்சைபுளியம்பட்டி அருகே அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை கடத்தி பணம் பறித்த 2 பேர் கைது; மேலும் 4 பேருக்கு வலைவீச்சு


புஞ்சைபுளியம்பட்டி அருகே  அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை  கடத்தி பணம் பறித்த 2 பேர் கைது;  மேலும் 4 பேருக்கு  வலைவீச்சு
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை கடத்தி பணம் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை கடத்தி பணம் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (வயது 45). இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை அ.தி.மு.க.வில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

எஸ்.ஈஸ்வரன் கடந்த மாதம் 25-ந் தேதி மதியம் புஜங்கனூரில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் பவானிசாகரில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம்பட்டி பிரிவு அருகே சென்றபோது அவருடைய மோட்டார்சைக்கிளை பின்னால் வந்த கார் வழிமறித்தது. பின்னர் அதில் இருந்து திபுதிபுவென இறங்கிய 6 பேர் முன்னாள் எம்.எல்.ஏ.வை சுற்றிவளைத்து அவரது கண்ணில் துணியை கட்டினர். பின்னர் அவரை காரில் கடத்திச் சென்றனர்.

பணம் பறிப்பு

பின்னர் அந்த கார் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டது. அந்த வீட்டில் வைத்து முன்னாள் எம்.எல்.ஏ.வை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மறுநாள் 26-ந் தேதி அதிகாலை அவரிடம் ரூ.3 கோடி பணம் கொடுத்தால்தான் விடுவிப்பதாக கூறியுள்ளனர். அதற்கு அவர் ரூ.1½ கோடி கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ.வை அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு எஸ்.ஈஸ்வரன் கடத்தல் கும்பலிடம் ரூ.1½ கோடி கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட கும்பல் காரில் அங்கிருந்து தப்பிச்சென்றது.

தீவிர விசாரணை

கடத்தல்காரர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த எஸ்.ஈஸ்வரன் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு (புஞ்சைபுளியம்பட்டி), சோபியா பானு (சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்), வடிவேல்குமார் (பங்களாப்புதூர்) ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

செல்போன் சிக்னல்

புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், முன்னாள் எம்.எல்.ஏ.வின் வீடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர். இதில் கடத்தல் கும்பல் முன்னாள் எம்.எல்.ஏ.வை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பணம் பறித்ததும், பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ.வை வீட்டில் விட்டு்விட்டு் அந்த பணத்தை தாங்கள் வந்த காரில் வைத்துக்கொண்டு் அங்கிருந்து 6 பேர் தப்பித்து சென்ற காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களது செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்ததில் கடத்தலில் தொடர்புடைய 2 பேர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நிற்பதை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்றுபார்த்தபோது 2 பேர் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்துகொண்டிருந்தனர்.

2 பேர் கைது

இதனால் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த பிரைட் பாலு (45), சத்தியமங்கலம் கெஞ்சனூரை சேர்ந்த சீனிவாசன் (48) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரனை கடத்தி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் நேருநகர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story