பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரையில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பாக்கு போன்றவற்றை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளார். அதற்காக தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வந்தனர். அப்போது தல்லாகுளத்தில் ஒரு பள்ளி அருகே மாணவர்களுக்கு போதை புகையிலை, பாக்கு ஆகியவற்றை ஒரு கும்பல் விற்பதாக தகவல் வந்தது. உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் செல்லூரை சேர்ந்த ஜலீல்இப்ராகிம் (வயது 61), முருகேசன் (58), தினேஷ்குமார் (26), எஸ்.ஆலங்குளம் பாண்டியராஜன் (27), ஒத்தக்கடை கணேசன் (37), மீனாட்சிபுரம் அருண்குமார் (27) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து குறைந்த விலையில் புகையிலை, பாக்கு ஆகியவற்றை வாங்கி வந்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அதை தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 91 கிலோ பாக்கு, புகையிலை மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள் மற்றும் அதனை விற்று வைத்திருந்த 2 லட்சத்து 67 ஆயிரத்து 160 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மதுரையில் அரசு தடை செய்த புகையிலை, பாக்கு விற்ற கும்பலை பிடித்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.