தேனி அருகேகல்லூரி பேராசிரியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு:மர்ம நபர்கள் கைவரிசை


தேனி அருகேகல்லூரி பேராசிரியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு:மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:46 PM GMT)

தேனி அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 20 பவுன் நகை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தேனி

கல்லூரி பேராசிரியர்

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் அருகே உள்ள ஜமீன் இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் குமார் (வயது 38). இவர், தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் இருந்து மாரியம்மன் கோவில்பட்டி செல்லும் சாலையில் உள்ள சிவசங்கர் நகரில் வசித்து வருகிறார். அவர் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 1-ந்தேதி அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவில் சிவசங்கர் நகருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்ததோடு அதில் இருந்த பொருட்கள் அலங்கோலமாக சிதறி கிடந்தன. நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளும் கீழே கிடந்தன.

20½ பவுன் திருட்டு

மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த 20½ பவுன் நகைகள் திருடுபோய் இருந்தது. பூட்டிக் கிடந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story